Sunday 11 August 2013

சுஜீத்.ஜி எனும் அற்புதக் கலைஞன்..

ஈழத்துக் கலைஞர்களின் வீச்சு புலம்பெயர் நாடுகளில் அதி உன்னத நிலையில் உள்ளதை மறுக்க முடியாது. தமது கல்வி/இசை உணர்வு சார்ந்ததாகவே எம்மால் உணரப்படுகிறது. கிராமம் தோறும் உருவாகிய இசைக்குழுக்கள் பல்துறை அனுபவம் கொண்ட கலைஞர்களை உருவாக்கியது. நாடகம், நாட்டுக்கூத்து, நாட்டியம் தாளலய நாடகம் என் விரியும் இசை குவியும் கட்டமைப்புக்களில் நம் கலைஞர்கள் புத்தூக்கம் பெற்றனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் வருகையுடன் இன்னொரு பரிமாணத்திற்கு இசை மாற்றம் பெற்றன. மெல்லிசை, பொப்பிசை, துள்ளலிசை, பைலா பாடல்கள் என்று வளர்ந்தன. மக்களையும் ஊர் ஊராக கவரும் அளவிற்கு கலைஞர்களூம் தங்களைத் தயார் படுத்தினர். சில பாடகர்களுக்கு ரசிகர் கூட்டமும் உருவாகினர். ரூபவாகினியின் தோற்றம் இன்னும் ஒரு படி மேலே இசைக் கலைஞர்களை ஒன்றிணையும் உருவாக்கியது. பாடசாலை மாணவர்களிடையே பிரபல்யமான இசை வடிவம் பொப்பிசையானது. இசைக் குழுக்களின் வருகை பல பாடகர்களை உருவாக்கியது. பிரதேச வேறுபாடுகள் இன்றி, இன முரண்பாடுகளை விலக்கியபடி முன்னேற்றம் கண்டனர். கிராமத்துக் கோவில் திருவிழாக்கள், மக்களின் சங்குகளில் இசைக்குழுக்களையும் அழைத்து கௌரவிக்கும் நிகழ்வும் நடந்தன. பின்னாளில் தனியார் ஒலிபரப்பு/ ஒளிபரப்பு நிறுவனங்களின் வருகையும், சமுதாயம் தொடங்கி இன்றுவரை தொடர்கின்ற ஈழத்து திரைப்படங்கள்/ குறும்படங்கள்/ தொடர்கள் என கலைஞர்களின் ஒருங்கிணைவு மகிழ்ச்சியாகவே அமைந்தது. தமிழக்த் திரைப்படங்களுடன் தமிழக மேடைகளும் இலங்கைக் கலைஞர்களை வரவேற்றன. பின்னாளில் இன மோதல், அரசியல் முரண்பாடுகளால் புலப்பெயர்வு இடம்பெற்றது. பலரின் வருகை புலம் பெயர் நாடுகளில் நிறையக் கலைஞர்களை உருவாக்கியதுடன், ஏற்கனவே புகழ் பெற்றவர்களையும் உள் வாங்கியது. நவீன தொழிநுட்ப வசதி, கல்வி, இசை/திரை அறிவுக் கூட்டிணைவு பொன்ற காரணங்களினால் நல்ல இசைக்குழுக்களுடன் , பாடலாசிரியர்களும் பாடகர்களும் உருவாகினர். வெறும் சினிமாப் பாடல்களையே கேட்டுக்கொண்டிருந்த நாம் புதிய வடிவங்கள் உருவானதையும் உணர்ந்தனர். இலங்கைத் திரைப்படங்களில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் மேலும் இது போன்ற கலை மன்றங்களில்/ தனியார் ஒலி/ஒளி பரப்பு நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் புலம் பெயர்ந்திருந்தார்கள். இந்த வகையில் நமக்கு கிடைத்த அரிய கலைஞர்தான் சுஜீத்.ஜி அவர்கள்.சமூக சிந்தனை,தமிழ்,தமிழிசை மீதான பற்று புதிதான இசைக்கோர்ப்பு புதிய பரிணாமத்துடன் அவரை அடையாளப்படுத்துகின்றது.. சொல்லாட்சியுடன் கூடிய பாடல் வரிகளை மனதைத் தொடும் வண்ணம் எழுதுவதுடன், அதனை தன் வயப் படுத்தி இசைக்கோர்ப்பும் செய்வதில் திறமையுடன் செயல்பட்டு வருகிறார்.
அதிசயம் தான். இசைப்பயிற்சி இல்லாமலேயே தாளக்கட்டு சிதையாமல் எப்படி இவரால் முடிகிறது என்று ஆச்சர்யப்பட்டேன். இங்கு பிறந்து வளர்கிற நம் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் விரும்புகின்ற சொல்லிசையினை லாவகமாக யாவரும் கேட்கக்கூடிய விதத்தில் பாடல்களைத் தருகிறார். மனதையும் கவர்கிறார். எந்த ஒரு கலைஞனுக்கும் ஆத்மார்த்தமாக சமூகம் பற்றிய கரிசனை இருத்தல் அவசியம். அப்போது தான் அவனுடன், அவன் கலையும் மக்களோடு வாழும். சுஜீத்.ஜி மக்களை, தான் வாழும் இனத்தை, மொழியை நேசிப்பதால் தான் அவரின் இசை பல்வேறு தரப்பினரையும் சென்றடைந்திருக்கிறது. 1976இல் பிறந்த இளைஞரான சுஜீத்.ஜியின் அண்மைய வெளியீடான 'இராவண்ணன்'பாடல் தொகுப்பினை ரசிக்கக் கிடைத்தது.அற்புதமான இசைக்கோர்ப்பு.மனதுள் ஊடுருவும் ஏதோ புரியாத வலிகள்... பாராட்டத்தான் வேண்டும். வெற்றுச் சொற்களில் இவருக்கு நம்பிக்கையில்லை. தான் வாழும் சமூகத்திற்கு செய்தல் வேண்டும் என்கிற உணர்வு மிக்கவர். தமிழ்ச் சிலையை உளி கொண்டு செதுக்கி அழகிய வடிவைத் தருகின்ற இவன் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். தன் கண் முன்னே காணுகின்ற காட்சிகளை தனக்குள் இருத்தி பாடலாக்கி அதற்கான காட்சி வடிவங்களை நம் மனத்திரையில் ஓடும் உணர்வை தருபவர். 'இனிது வேண்டுமா? புதிது வேண்டுமா? அறிவு வேண்டுமா? அறிக தமிழ்' தமிழ் மீதான பற்றினை அவரின் கவி வரிகள் மூலம் காணலாம். 'வான்மீகி வரைந்த இராமாயணத்தால் ஆரியன் இராமன் ஆண்டவனானான் அயலவன் வாலி குரங்கானான்-என் முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான் ஆரியத்திற்கு நான் இராவண்ணன்' எமது வரலாற்றுத் திரிபு வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதின் வலி கோபமாகிறது. சத்தியமாய் வாழ நினைக்கும் ஒருவனின் சாத்வீகமான வரிகள். கல் போட்டு,மண் போட்டு காலத்தின் பின் போட பகைமை துடிக்கிறது என்றும் மறக்காத காலத்தோடேயோடு எந்நாளும் நீ ஓடு-உலகத்தின் முன்னோடு உணர்வோடே நீ ஓடு உந்தன் பேர் கெடுக்க நினைக்கின்றான் கயவன் உன்னை தீயனாக்கத் துடிக்கின்றான் பகைவன் தமிழ் மண்ணின் ஈரம் நாம்,தமிழ் மண்ணின் வீரம் நாம் தமிழ் வெல்லப் போவோம் தமிழாகிப்போவோம் நாம் இராவண்ணன் பேரன் நான்,அறிந்ததைச் சொல்வேன் நான், வரி கொண்ட தீரன் நான் புலியாகப் பாய்வேன் நான்... கவியின் ஆழம் பாடலாக நம்முள் உணர்வை ஊட்டச் செய்கிறது. போர்க்குணம் ஆன்மாவில் இருப்பதை உணரமுடிகிறது. 'இந்தச் சமுதாயம் என்றும் தரும் காயம் வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும் அது ஆட்டு மந்தை சேர்ந்து கூவும் சந்தை.. ...அடி மேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய் உருப்பெற்றுத் தெளிவாய் நடைபோடு எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு... லண்டனில் இருந்து வெளிவரும் 'ஒரு பேப்பர்' பத்திரிகையில் எல்லாளன் எனும் பெயரில் நிறைய எழுதியுள்ளார். 'கொஞ்சம் யோசியுங்க' எனும் தலைப்பில் இவர் எழுதிய பத்தி எழுத்துக்களின் மூலம் சமூகப் பிரச்சினகளை தனக்கே உரிய பாணியில் எழுதிவைகள் பலரின் கவனத்தை ஈர்த்தன. சிரிப்பு தவழும் முகத்துடன் என்றும் காட்சி தரும் சுஜீத்.ஜி உள்ளுக்குள் தாயக சோகம், தாய்நாட்டின் விடுதலை, நமக்குள் புதைந்து,சிதைக்கும் ஏற்றத்தாழ்வு/சாதி முறைமை மீதான கோபம் .. தடுமாறாத வரிகளுடன் பாடலைத் தருகிற போது சிரிப்புக்குள்ளும் ரணங்கள் /வலிகள் இருப்பதை உணர முடிகிறது. இன்றைய தலைமுறையின் சாட்சி வடிவம். எமது ஈழம் சார்ந்த அனைத்தும் புலம்பெயர் இளையோரிடம் தான் ஒப்படைக்கப்பட்டன கலைகள் உட்பட... இவரின் தாய் ஒரு சங்கீத ஆசிரியர். தாயின் உள்ளுணர்வும் சுஜீத்தின் சூழலும் நமக்கு ஒரு இளைய கலைஞனைத் தந்திருகிறது. லண்டனில் வாழும் சுஜீத்.ஜி அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதத்தில் பாடல்களைத் தருவதனால் ஊடகங்களும் இவரின் மீது தனி மரியாதை தருகிறது. கனடா ரி.வி.ஐ தொலைக்காட்சி, லண்டன் தீபம், பெரியார் தளம் போனறன இவரின் சந்திப்பு நிகழ்வினை ஒளிபரப்பியுள்ளன. பாடல் ஊடாக தான் விரும்புகின்ற சமூகத்திற்கான செய்தியினை ஆணித்தரமாகச் சொல்லிவிடுவது பாராட்டுக்குரியது. நம்பிக்கை தான் வாழ்க்கை.உன்னில் நம்பிக்கை வை. ‘இனியும் பொறுமை இல்லை பகையே எட்டப்போ இல்லை என்று போனால் இன்றே செத்துப்போ குட்டக்குனியும் கும்பல் எண்ணம் விட்டுப்போ வெட்டிக்குடை சாய்க்க முன்னர் தப்பிப்போ பொறுத்துப் பூமி ஆளும் எண்ணம் இல்லை-பகை வறுத்துப் பூமி ஆள்வோம் இல்லை இனித் தொல்லை’ ...பாரதியின் துணிச்சலான வரிகள் போன்றதொரு வரிகள்.. இளைஞர்களின் மனதை இன்றைய நாளில் ஆக்கிரமித்தவர் எனலாம். இவரின் 'பாவம்' எனும் குறும்படம் குறிப்பிடத்தக்கது. போர் அவலங்கள்/அவை தந்த தனி மனித சோகங்களை/இழப்புக்களை எப்படி நம்மவர்கள் இங்கு எப்படி காசாக்குகிறார்கள் என்பதையும் வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வை/முடிவை ஒரு கணப் பொழுதில் எமக்கு உணர்த்துகின்ற ஒரு குறுந்திரைவடிவத்தை தந்திருக்கின்ற அளப்பரிய முயற்சியை யாவரும் பாராட்டுவதை காண்கிறோம். இவரின் இசை பற்றிய முழுமையான ஆய்வு நிகழ்த்தப்பட வேண்டும். பல இசை தொகுப்புக்களை வெளியிடும் அளவிற்குத் திறமை கொண்டவரான சுஜீத்ஜி ஏற்கனவே சிங்கிள்ஸ்(2005), அடி மேல் அடி(2007), அணையாது(2010), இராவண்ணன்(2012) மக்களை திரும்பிப் பார்க்க வைத்ததை எமக்குக் கிடைக்கின்ற விமர்சனங்களிருந்து தெரிய வருகிறது. மேலும் ஐங்கரன் நிறுவனம், ஈழவர் திரைக்கலை மன்றம் போன்றன தங்களது முழு ஆதரவையும் வழங்கிக் கௌரவித்தமை உண்மையாகவும் சத்தியமாகவும் வளர்கின்ற சிறந்த கலைஞர்கள் காலத்தாலும் கௌரவம் பெறுவார்கள் என்பதே நியதி. ஆங்கில பாடல்களையும் பாடியுள்ளதால் பிற மொழிக்காரரிடையேயும் பிரபல்யமானார். ...’எங்கே வந்து பார் என்னைக் கீழே தள்ளிப் பார் வந்து தள்ளிப் பார்,கொள்ளி வைத்துப் பார் வாழ்வினை வாழுவேன்,வாழ்வினை வெல்லுவேன்!...’ தனக்கென தனி வலையமைப்பை இணையத்தில் உருவாக்கியுள்ளார்.( http://sujeethg.me/)
ஆணித்தரமுடனும்,உறுதியுடனும் நம்மிடையே உரத்தினை வளர்க்கும் சுஜீத்ஜி போன்ற கலைஞர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை தளர்ந்துவிடாது. வாழ்த்துவோம்!! முல்லைஅமுதன் 09/09/2012 நன்றி:உடல்(பிரான்ஸ்)

No comments:

Post a Comment